Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் செல்திசை - ஒரு பரிந்துரை
இராசேந்திர சோழன்

குறிப்பு : நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று இலக்கிய அமைப்புகளை வைத்துள்ளன. தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள், கட்சிக்குள்ளேயே ‘இலக்கிய அணி’ என்கிற பிரிவை உருவாக்கி வைத்துள்ளன. ஆனால் இடதுசாரி அமைப்புகள் அப்படி நேரடியாக உருவாக்காமல், இலக்கிய அமைப்பை ஒரு மக்கள் திரள் அமைப்பாக வேறு ஒரு தனிப் பெயரில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பா.ம.க.வும் அதன் நிறுவனர் மருத்துவர். ச. இராமதாசு அவர்கள் முன் முயற்சியில் ‘தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்’ என்னும் அமைப்பைத் தொடங்கியுள்ளது. இவ்வமைப்பு தோற்றம் பெற்ற நாளிலிருந்து இதன் கொள்கை நெறி, திசை வழி பற்றி பலராலும் - அதாவது நாட்டில் ஏற்கெனவே பல இலக்கிய அமைப்புகள் இயங்க, தற்போது புதிதாக “படைப்பாளிகள் பேரியக்கத்திற்கான” தேவை என்ன, என்பதான கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்காலச் சூழலில் ஏற்கெனவே இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் கவனம் கொள்ளத் தவறிய அம்சங்கள் குறித்தும், படைப்பாளிகள் பேரியக்கம் அதைக் கருத்தில் கொண்டு அதன் செல்திசை எவ்வாறு இருக்கலாம், இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கும் நோக்கிலும், இவ்வமைப்பின் பொறுப்பாளர்களுக்கும், ஆர்வலர்களுக்குமான விவாதத்திற்காக இவ்வரைவு முன் வைக்கப்படுகிறது. கூடவே இடைக்கால ஏற்பாடாக சில அமைப்பு விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பயன்பாடு அமைப்பு ஆர்வலர் சார்ந்து.

பண்டைத் தமிழ்க் கலைகள்

தொன்மைக் காலம் முதலே, ‘வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு’ என அறியப்பட்ட தேயம் நம் தமிழ்த் தேயம். இத்தேயத்தில் இயற்கையோடு இயைந்து பிறப்பு அடிப்படை ஏற்றத் தாழ்வின்றி வாழும் நிலப் பகுதிக்கேற்ப திணைகளை வகுத்து வாழ்ந்த மக்கள் நம் தமிழ் மக்கள். இத்தமிழர்களின் அக, புற வாழ்வை, வாழ்வியல் அறநெறிகளைச் சித்தரிப்பதே பண்டைத் தமிழ்க் கலைப் படைப்புகள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலப் பகுதிகளில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு குரவை, கூத்து முதலான ஆடல் பாடல்களில் மகிழ்ந்து வாழ்ந்த மக்களின் காதல், வீரம், ஈகை, கொடை, நட்பு, விருந்தோம்பல், கல்வித் திறம் முதலான பண்புகளை அவை போற்றிப் பாராட்டப் பெற்றதை பண்டையத் தமிழ் இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், நாட்டியம் முதலான கலைப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை வாட்டும் வறுமையையும், வளமிக்க செல்வச் செழிப்பையும் கொண்ட ஏற்றத் தாழ்வான சமூகத்தையும் இவை புலப்படுத்துகின்றன.
இப்படி வாழ்ந்த தமிழ் மக்கள் வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகள் காரணமாக பல்வேறு படையெடுப்பு களுக்கு உள்ளாக அது தமிழ்க் கலைப் படைப்புகளிலும் தாக்கத்தை விளைவித்தது.

பார்ப்பனிய ஆதிக்கம் :

சங்க காலம் முதலே வைதிகப் பார்ப்பனிய மதமும், சமண பௌத்த சமயங்களும் தமிழகத்தில் பரவியிருந்தன. பார்ப்பனிய மதம் வருண சாதிக் கோட்பாட்டை அறிமுகம் செய்து தமிழர்களிடையே பிறப்பு அடிப்படைப் பாகுபாட்டையும் வேள்விச் சடங்கு முறைகளையும் புகுத்தியது. சமண பௌத்த சமயங்கள் இப்பாகு பாட்டையொழித்த சமத்துவத் தையும் புலனொழுக்கத்தையும் வலியுறுத்தின. இயல்பிலேயே சமத்துவ நோக் கம் கொண்ட தமிழக மக்கள் மத்தியில், பார்ப்பனிய வருண சாதிக் கோட்பாடு கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. எனினும் மாறிவரும் சமூகக் கட்டமைப்பில் பார்ப் பனியமே ஆதிக்க சக்திகளின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் உகந்த கருத்தாக்கமாயிருந்ததில் அது அதிகாரத்தால் உயர்த்திப் போற்றி பாதுகாக்கப்பட, சமண பௌத்த சமயங்கள் கடும் தாக்குதலுக்குள்ளாயின.

கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் தோற்றுவிக்கப்பட்ட ‘பக்தி இயக்கம்’ சமண பௌத்த சமயங்களை ஈவு இரக்கமின்றி கொடுமையாக ஒடுக்கி, பார்ப்பனியத்தின் பிடியை வலுப்படுத்தின. இந்நிலை பல்லவர் காலம் தொடங்கி பிற்காலச் சோழர் காலத்தில் மேலும் உச்சம் பெற சமூகத்தில், பார்ப் பனியத்தின் பிடி மேலும் இறுகி அதுவே அனைத்து நிலைகளிலும் மேலாதிக்கம் செலுத்தியது. அக்காலத் தமிழ்க் கலைப் படைப்புகள் இவற்றைத் தெளிவுபடுத்துவதாயுள்ளன.

பிற பண்பாட்டுத் தாக்கங்கள் :

பார்ப்பனியப் பண்பாட்டுப் படை யெடுப்பை அடுத்து வந்த இசுலாமிய, நாயக்க, மராத்திய படையெடுப்புகளும் தமிழகத்தில் பல தாக்கங்களை விளைவித்தன. இம்மக்களின் குடியேற்றம் காரணமாக இவர்களது பண்பாடும் தமிழ்ப் பண்பாட்டில் செல்வாக்கு செலுத்தியது. இவை தமிழகத்தின் கலைப் படைப்புகள் அனைத்தின் மீதும் தன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இம்மொழிச் சொற்கள் பல தமிழில் கலந்தன. எனினும், இதில் இசுலாமியப் படையெடுப்பு தவிர பிற இரண்டும் பார்ப்பனிய மேலாதிக்கத்தையே உயர்த்திப் பிடித்ததில் இவர்கள் ஆட்சியிலும் வைதீக பார்ப்பனிய மதமே கோலோச்சியது. இசுலாமிய ஆட்சியிலும், பாரசீக, அராபி மொழியும், இசுலாமிய மதமும், அதிகார மையங்களில் மட்டுமே பவனி வந்ததே தவிர, சமூகக் கட்டமைப்பில் பார்ப்பனியமே செல்வாக்கில் இருந்தது.

விளைவாக குலக்குழு வாழ்வி லிருந்து வளர்ச்சியுற்று நேரடியாக ஒரு தேசிய இனமாகப் பரிணமித்திருக்க வேண்டிய தமிழ்ச் சமூகம் வருணங் களாகவும் சாதிகளாகவும் பாகுபடுத்தப் பட்டு, பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது. சமஸ்கிருதம் இறைமொழி என அது மேல்நிலையில் வைக்கப்பட்டு தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. தமிழர்கள் தொழுது வந்த குலக் குறிகள், சிறு தெய்வங்கள் பார்ப்பனியப் பெருங் கடவுளர்களால் உள்வாங்கப்பட்டு அவை கிளைத் தெய்வங்கள், அல்லது இழித் தெய்வங்கள் ஆக்கப்பட்டனர். தமிழரின் மரபு வழிக் கலைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பார்ப்பனியக் கலைகளே மேல்நிலையில் வைக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் உருவான நாட்டுப்புற, மற்றும் செவ்வியல் கலைப் படைப்புகள் வழி இவற்றை உணரலாம்.

ஐரோப்பியத் தாக்கம் :

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியப் படையெடுப்பின் விளைவாக தமிழகம் பல மாற்றங்களுக் குள்ளாகியது. மதத்தைப் பரப்ப வந்த பாதிரி மார்கள் தமிழ் கற்று அதன் மேன்மையை உணர்த்த இதன்வழி ‘திராவிடக் கருத்தாக்கம்’ தோற்றம் பெற்றது. தங்கள் மதமாற்ற முயற்சிகளுக்கு பெருந்தடையாய் தமிழ்ச் சமூகத்தின் ஆதிக்க நிலையிலிருந்த பார்ப்பனியத்தை எதிர்க்கவும், வலுவிழக்கச் செய்யவும் இவர்கள் சமூகத்தைப் பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதோர் எனப் பாகுபாடு செய்தது பார்ப்பனிய எதிர்ப்புக்கு வழி வகுத்தது. இத்துடன் ஆரிய எதிர் திராவிட, சமஸ்கிருத எதிர் தமிழ் கருத்தாக்கங் களுக்கும் இது உரமூட்டியது. சமூகத்தின் கடைநிலையில் வைக்கப் பட்டிருந்த தாழ்த்தப் பட்டோர், சாணார் ஆகியோரே உடனடியாக மதமாற்றம் செய்ய உகந்த பிரிவினர் என மதிப்பீடு செய்து அதில் முனைப்போடு இறங்கியது.

இதுவும், இதன் உடன் நிகழ்வான பல நடவடிக்கை களும் தமிழகத்தின் சமூக நிலையிலும், சாதியக் கட்ட மைப்பிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
இவை, இக்காலத் தமிழ்க் கலைப் படைப்புகளில் வெளிப்பட்ட அதே வேளை இப்புறச்சூழல் தமிழில் புதியதாக உரை நடை இலக்கிய வடிவம் தோற்றம் பெறவும் உதவியது.

இந்திய தேசியம் :

வெள்ளை ஏகாதிபத்தியத்தைத் தொடக்க முதலே எதிர்த்து வந்த தமிழகம் காலப் போக்கில், இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் இதே போல நடைபெற்று வந்த போராட்டங்களோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள வேண்டி நேர்ந்ததன் விளைவாக ‘இந்திய தேசியம்’ என்னும் கருத்தாக்கத்திற்கு ஆட்பட்டது.
இது தேசிய இன வரையறுப்பு களுக்குப் புறம்பானதும், ஏகாதிபத்திய மற்றும் பெரு முதலாளிய பார்ப்பனிய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குத் தேவையானதுமான ஒரு கருத்தாக்கம் ஆகும். இதனால் இது தமிழ்த் தேசிய இன உரிமைகளை புறக்கணிப்பதும், வெள்ளை ஏகாதிபத்தியத்தோடு சமரசப் போக்கைக் கடைபிடிப்பதுமாகவே அமைந்தது.

எனினும், இக்கருத்தாக்கங்களின் உடனிகழ்வாகத் தோன்றிய சில அமைப்புகள், சமூக நோக்கில் குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைத் திருமணம், மணக்கொடை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, சாதியப் பாகுபாடு ஒழிப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்ற சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி சமூகத்தில் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்தம் என்னும் இரு தளங்களில் இக்கருத்தாக்கம் இயங்கியது.

இக்காலத் தமிழ்க் கலைப் படைப்புகள், குறிப்பாக கதை, கவிதை, நவீனம், இசை, பாடல், நாடகம் ஆகிய அனைத்தும் பெருமளவும் இப்படிப் பட்ட சிந்தனைகளைத் தாங்கியே வெளிவந்தன. எனினும் இது பாரத தேசியத்தை முன்னிறுத்தியதால் தவிர்க்க முடியாத படி பார்ப்பனியப் பண்பாட்டுச் சகதியில் கால் பதித்து அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்ததுடன், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் செல் வாக்கோடு விளங்கிய இவ்வியக்கம் சுதந்திரத்திற்குப் பின் வீறு கொள்ள முடியாமல் முடங்கியது.

திராவிடத் தேசியம் :

இந்திய தேசிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட இத் திராவிடத் தேசியம் இந்திய தேசியம் போலவே அறிவி யலுக்குப் புறம்பான தாக அமைந்ததில் இதுவும் தமிழ்த் தேசியத்திற்கு முரணாகவே செயல்பட்டது. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு பகுதிகளையும் உள்ளடக்கியதாக இது முன்வைக்கப் பட்ட போதிலும் இதன் செயல் களம் தமிழகம் மட்டுமாகவே இருந்தது. எனினும், இது ஆரியத்திற் கெதிரானது என்பதைப் புலப்படுத்துவதற்காகவே தமிழகம் எனப் பெயரிடாமல், ‘திராவிடம்’ என்னும் சொல்லாடல் கைக்கொள்ளப் படுவதாகச் சொல்லப்பட்டது.
வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, பகுத்தறிவு, தன் மரியாதை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, திராவிட நாடு அமைப்பு முதலான முழக்கங்களை முன்னிறுத்திச் செயல்பட்ட இவ் வியக்கம் சமூகத் தளத்தில் தமிழகத்தில் விளைவித்த தாக்கங்கள் பல.

தமிழகத்தில் மொழிப்பற்று, இனப் பற்று ஆகியவற்றையூட்டி துடிப்பு மிக்க எண்ணற்ற இளை ஞர்களைத் திரட்டியது, இட ஒதுக்கீடு, சமூக நீதிக்காகப் போராடியது. பார்ப்பனியச் சடங்கொழித்த சீர் திருத்த மற்றும் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து, பண்பாட்டு மாற்றங்களுக்கு பங்களிப்பு செய்தது ஆகியன குறிப்பிடத் தக்கன. இக்காலத் தமிழ்ப் படைப்புகள் இவற்றை வெளிப்படுத்தின. எனினும் திராவிடக் கருத்தாக்கம் அறிவியல் நோக்கிற்கு எதிராக இருந்த தாலும், இதன் தோற்றத் தலைவர் களும் முன்னோடிகளும் தாங்கள் எந்தச் சிந்தனைகளை முன் வைத்து எப்படிப் பட்ட ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்களோ, அப்படிப்பட்ட ஆதிக்க சக்திகளோடே சமரசமாகிப் போனதாலும் இக்கருத் தாக்கம் நீர்த்து தடம் மாறியது.

தனித்தமிழ் இயக்கம் :

தமிழில் பிற மொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழையே கைக்கொள்ளும் நோக்கில் தோற்றம் பெற்றதே தனித் தமிழ் இயக்கம். எனினும் இது பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தி வடமொழியை எதிர்த்த அளவு ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. பார்ப்பனரல்லாத பிற அனைத்து சாதி சமத்துவத்தையும் வலியுறுத்த வில்லை. இதனால் இது பார்ப்பனர் அல்லாத உயர் சாதியினர் இயக் கமாகவே அமைந்தது. தவிர, இத்தனித் தமிழ் நோக்கினர் பார்ப்பனர் ஆதிக் கத்தை எதிர்த்த ஆங்கில ஆதரவுப் போக்கினராக ஒரு பிரி வினரும், வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்த இந்திய தேசிய கருத்தாக்கத்தை ஏற்ற ஒரு பிரிவினராகவும், ஆக இரு வேறு இலக்குகள் கொண்டவர்களாக விளங்கினர்.

இவ்விரு இயக்கங்களுமே தெளிவான, வரையறுக்கப் பட்ட வேலைத் திட்டம் ஏதுமின்றி, தொடர்ச்சியாக இயங்க இயலாது போனாலும், வடமொழி ஆதிக்கத் திலிருந்து தமிழை மீட்டெடுத்ததிலும், தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போராட்டங்களுக்கு கருத்தியல் படைக்கலன் வழங்கியதிலும் இவற்றுக்கு முதன்மையான பங்குண்டு.

மணிக்கொடிக் காலம் :

வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பில் இந்திய தேசிய நோக்கில் மக்களை விழிப்படையச் செய்யும் முயற்சியில் 1930களில் தோற்றம் பெற்ற இதழ்களில் ஒன்றான ‘மணிக்கொடி’ மேலை நாட்டு கலைப் படைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தில் தமிழ்க் கலை இலக் கியங்களையும் உலகத் தரத்துக்கு - அதற்கு இணையாகப் படைக்கும் முயற்சியில் சுதந்திரமாக இயங்கவும், சோதனைகள் மேற்கொள்ளவும் களம் அமைத்துத் தந்தது. குறிப்பான எந்த ஒரு சமூகக் கோட்பாட்டையும் முன் வைக்காமல் படைப்புகளில் தரம், சோதனை முயற்சி களுக்கான தேடல் ஆகியவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட ஒரு போக்கு இது.

1933 முதல் 36 வரை, பின் 37 முதல் 39 வரை என ஒரு ஆறாண்டு காலம் வெளிவந்த இவ்விதழ் தமிழ்ப் படைப் பிலக்கிய உலகில் புதிதாக பிறப்பெடுத்த சிறுகதை வடிவில் பல சோதனை முயற்சிகளுக்கு வாய்ப்பளித்ததுடன், குறிப் பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியது. பின்னாளில் சமூக நோக்கோடும், இலக்கியத் தரத்தோடும் பல படைப் பாளிகள் உருவாகவும், அதற்கான முன்மாதிரி படைப்புகளை உருவாக்கி, அடித்தளம் அமைத்துத் தந்ததும், இதன் முக்கியப் பங்காகக் கருதப்படுகிறது.

சரஸ்வதி காலம் :

மணிக் கொடியின் செயல் பாட்டிற்குப் பின் அந்த இடத்தை இட்டு நிரப்பும் வகையிலும், அதே வேளை ஒரு திட்ட வட்டமான சமூக இலக்குடனும் கலை இலக்கியப் படைப்புகளைத் தாங்கி வெளி வந்த சரஸ்வதி இதழின் பெயரால் அறியப்படும் காலம் இது. “மேலை நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்தினைத் திரட்டித் தமிழர்களுக்குத் தரவேண்டும். அத்துடன் மறைந்து வரும் நமது கலைச் செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிட வேண்டும். தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளி வருவதற்கு நம்மால் ஆன பணியைச் செய்ய வேண்டும்.” “நாட்டு மக்களை உயர்த்துவதற் காக எழுதவேண்டும். சமூகத்தை சக்தி வாய்ந்ததாக ஆக்குவதற்கு எழுத வேண்டும். கிராமவாசியும் புரிந்து கொள்ளக் கூடிய தமிழில் எழுத வேண்டும்.”

“குறுகிய நோக்கோடு முற்போக்கு பிற்போக்கு அம்சங்களைக் கணித்து ஒதுங்கிப் போகாமல் மனித வளர்ச்சிக்குப் பாடுபடும் சகல சக்தி களையும் அரவணைத்துப் போக வேண்டும்” என்று தங்கள் பாதையை வரையறை செய்து கொண்டு பயணித்த இதழாகும் இது. 1955 தொடங்கி ஒரு நான்காண்டு காலம் மாத இதழாகவும், மூன்றாண்டு காலம் மாதமிருமுறை இதழாகவும், 1962 வரை ஏழாண்டு காலம் இயங்கிய இவ்விதழில், தமிழகத்தில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற பல தரப்பட்ட படைப் பாளிகளும் எழுதினர். ஏறக் குறைய பின்னாளில் மக்கள் இலக்கியம் செல்ல வேண்டிய பாதை எது என்பதை முன் னெடுத்து சமூக நோக்கும் தரமும் மிக்கு விளங்கியது.

இடதுசாரி சிந்தனை :

சுதந்திரப் போராட்டக் காலத் திலேயே பொதுவுடைமைச் சிந்தனைகளின் தாக்கத்தில் 1938இல் அகில இந்திய அளவில் நிறுவப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1942இல் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மக்கள் நாடக இயக்கம் ஆகியன தமிழகத்தில் பெருமளவில் எந்த செல்வாக்கையும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. சுதந்திரத்திற்குப் பின் இந்த இடதுசாரிப் போக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளாகத் தனிப் பிரிந்தது போலவே கலை இலக்கிய அமைப்புகளும் பல்வேறு பிரிவுகளாகச் செயல்பட்டன. “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்”, “தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்”, “புரட்சிப் பண்பாட்டு இயக்கம்”, “மக்கள் கலை இலக்கியக் கழகம்”, “மக்கள் கலாச்சாரக் கழகம்” முதலான அமைப்புகளை இவ்வகைப் படுத்தலாம்.

பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த கலை இலக்கியப் படைப் புகளை உருவாக்குவது, இசைக் குழுக் கள், நாடகக் குழுக்களை உருவாக்கி, தெருமுனைப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முதலான நடவடிக்கைகள் மூலம் இவை பொது மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தின. என்றாலும் கலை இலக்கியங்கள் குறித்த இவர்களின் குறுகலான புரிதல், இல்லாத இந்திய தேசியத்தை முன்னிறுத்தி இருக்கும் தமிழ்த் தேசியத்தை அதற்குக் காவு கொடுத்த இவ்வமைப்புகளின் அணுகுமுறை.

சமூகத்தின் சாதியக் கட்டமைப்பு, தீண்டாமைக் கொடுமை, பார்ப்பனிய மேலாதிக்கம், பெண்ணடிமைத் தனம் ஆகியவை பற்றி போதிய அக்கறை யின்மை, பண் பாட்டுத் தளத்தில் இன்னமும் பார்ப்பனியத்தின் பிடியிலேயே சிக்கிக் கிடப்பது ஆகியன இப்போக்கை எந்த ஒரு பாய்ச்சலுக்கும் உட்படுத்தாமல் பழகிய தடத்திலேயே மீண்டும் மீண்டும் உழலச் செய்து வருகின்றன.

தலித் நோக்கு :

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கேயுரிய தனித்துவமான பிரச்சினைகளைத் தமிழ் இலக்கியங்கள் தனிக் கவனம் செலுத்திப் பார்க்காத சூழலில் குமுறிக் கிடந்த தலித் உணர்வுகள் 1991 அம்பேத்கர் நூற் றாண்டை யொட்டிய நிகழ்வுகளில் எழுச்சியும், உந்துதலும் பெற்று முன்னெழுந்தன. இதன் விளைவாக தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் பண்பாடு என்கிற கருத்தாக்கங்கள் முன் வைக்கப் பட்டன. இது சார்ந்த கலை படைப்புகளும் வெளிப்பட்டன.
90-களில் தீவிரமாக வெளிப்பட்ட இக்கருத்தாக்கங்கள் போதிய தத்துவ அடித்தளம் இன்மையாலும், தலித் விடுதலை என்பது சமூகத்தின் பிற பகுதிமக்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான விடுதலை என்பதாக அல்லாமல், தலித் மக்கள் மட்டுமே தனிப்பட வாழ்வது என்பது போல முன் வைக்கப்பட்டதாலும், செல்திசை இன்றி தேக்கமுற்றது. தவிர, தலித் கலை இலக்கியப் போக்கு என்பது இப்படி தனித்து வெளிப்பட பிற கலை இலக்கிய அமைப்புகள் இதற்கு உரிய முக்கியத்துவம் தந்து இதை கவனப் படுத்தியதன் விளைவாக தலித் என்கிற தனித்த போக்கிற்கான தேவையைக் குறைத்தன.

படைப்பாளிகள் பேரியக்கம் :

இச்சூழலில்தான் கடந்த காலக் கலை இலக்கிய அமைப்புகளின் அனுபவங் களிலிருந்து ஊட்டம் பெற்றும் அவற்றின் குறைபாடுகளை யுணர்ந்து அவற்றிலி ருந்து மீண்டு பாடம் கற்றும் உரிய இலக்கு நோக்கி பயணிக்கவும், தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் காக்கவும், அடையாளம் மீட்கவுமாக நிறுவப்பட்டுள்ள இயக்கமே ‘தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்’. பிறப்பு அடிப்படை பாகுபாடு அறியாது வாழ்ந்த பண்டைத் தமிழ்ச் சமூகம் இயல்பான வளர்ச்சிப் போக்கில் தமிழ்த் தேசிய இனமாக உருப் பெற்று தனக்கான தமிழ்த் தேசியப் பண் பாட்டை நிறுவியிருக்க வேண்டும். எனில், இது பார்ப்பனியப் பண்பாட்டுத் தாக்கத்தாலும், பின் ஏகாதிபத்திய பண்பாட்டுத் தாக்கத் தாலும் பாதிக்கப்பட்டும் சிதைந்தும் தற்போது தன் அடையாளமிழந்து சீரழிந்து கிடக்கிறது.
இந்நிலையில் இவ்வட நாட்டு பார்ப்பனிய மற்றும் ஏகாதிபத்திய பண்பாட்டுத் தாக்கத்திலிருந்து தமிழ் பண் பாட்டை மீட்பதும், அதன் தனித் தன்மையையும் அடையாளத் தையும் காப்பதுமே “தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக் கத்தின்” இலக்காகும்.

வளர்ச்சியடைந்த எந்த ஒரு தேசிய இனமும், தனக்கு மட்டுமேயான ‘சுத்த சுயம்புவான’ தேசிய இனப் பண் பாட்டைக் கைக்கொண்டு நிலவுவது இயலாது. காரணம், சமூகங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசங்களுக் குள்ளும் தேசிய இனங்களுக்குள்ளும் பண்பாட்டுத் தாக்கங்கள் பரிமாற்றங் கள் நிகழ்வது இயல்பானதே. எனவே, இதில் போற்றுதலுக்குரிய பண் பாட்டை ஊக்கி வளர்ப்பதும், எதிர்க்கப் படவேண்டிய பண்பாட்டை சாடி அழிப்பதுமே சரியான தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் திசை வழியாகும். இத்திசையில், தமிழ்ப் பண்பாடு என்பதன் பெயரால் ஆதிக்கப் பண்பாட்டிற்குத் துணை நிற்பதோ சனநாயகப் பண்பாட்டிற்கு எதிராகப் போவதோ சீரழிவுக்கே வழி வகுக்கும்.

எனவே, தமிழ்ப் பண்பாடு என நாம் குறிப்பிடுவது அது தமிழ்ச் சூழலில் தமிழ் அடையாளத்தோடு நிலவுவதான சனநாயகப் பண்பாடு அனைத்து வகையான ஆதிக்கங் களையும் எதிர்த்த பண்பாடு என்றே பொருள்படும். இப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், வளர்த்தெடுப்பதுமே “தமிழ்ப் படைப் பாளிகள் பேரியக்கத்தின்” இலக்கு ஆகும்.

இன்றைய கலை இலக்கிய போக்குகள் :

இன்று தமிழகத்தில் நிலவி வரும் கலை இலக்கிய பண்பாட்டுப் போக்குகள் முக்கியமாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வர்த்தக ரீதியில் நுகர்வோர் இச்சையைத் தீர்க்கும் வகையில் பரந்து பட்ட மக்களை மயக்கி பவனி வரு பவை. இவை பெருமளவும் ஆதிக்கக் கருத்தியல் சார்ந்தும், அதற்குச் சேவை செய்வதாகவும், பழமை வாதப் போக் கோடும், அது சார்ந்த மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பதாகவும் செயல் படுகின்றன. இரண்டாவது தமிழ்ப் படைப்பு களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதான முயற்சி என்கிற பெயரில் தமிழ் மரபை யும் அடையாளத்தையும் புறக்கணித்து மேலை நாட்டுத் தாக் கத்தில் அதை அடியொற்றியோ நகல் செய்தோ உருவாக்கப்படுபவை. இவையும் நவீனம் என்கிற பெயரால் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தவும், வாசக நுகர்வுக்குத் தீனி போடு பவையாகவுமே அமைந்து விடுகின்றன. மூன்றாவது தமிழக மக்களின் வாழ்வோடும் மரபோடும் பின்னிப் பிணைந்து அம்மக்களின் அடையாளத் தோடு படைக்கப்படும் கலைப் படைப்புகள். இவையே இன்றைய காலத்தின் தேவையாகிறது.

படைப்பாளிகள் பேரியக்கத்தின் இலக்கு :

இப்படிப் பட்ட மூன்று போக்குகளில் முதலிரண்டு போக்கின் அனுபவங்களையும் உள்வாங்கி அதன்வழி இம்மூன்றாவது போக்கில் நின்று செயலாற்றுவதே படைப்பாளிகள் பேரியக்கத்தின் இலக்காகும். இந்நோக்கில் இது தமிழகத்தில் நிலவி வரும் அனைத்து வகையான படைப்புகளையும் படைப்பாளர் களையும் ஒருங்கிணைக்கும் அமைப் பாகச் செயல்படும். இவ்வமைப்பு, தமிழக மண் ணுரிமை, மொழியுரிமை, மனித உரிமைகளைக் காக்க, தீண்டாமைக் கொடுமை யொழித்த, பெண்ணடிமைத்தனம் ஒழித்த சாதியப் பாகு பாடுகள், பால் பாகுபாடுகள் நீக்கிய சமத்துவ சமுதாயம் அமைக்கப் பாடுபடும். இந்நோக்கில், தத்துவார்த்தப் போக்குகளில், படைப் பாக்க உத்திகளை ஆய்ந்து விலக்க வேண்டிய வைகளை விலக்கி, கொள்ள வேண்டிய வைகளைக் கொண்டு அவற்றை முழுமையாகத் தன் நோக்கிற்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும். இளம் படைப்பாளிகளை ஊக்கு விக்கவும், பயிற்சிப் பட்டறைகள் மூலம் அவர்களை வளர்த்தெடுக்கவும் அவர்களது படைப்புகள் அச்சேறவும் உரிய வாய்ப்பளிப் பதுடன் முயற்சிகள் மேற்கொள்ளவும்

ஆண்டுதோறும் சிறந்த கலை இலக்கியப் படைப்பு களுக்கு பரிசளிக்கும். மரபுவழிப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் நவீன கதைகள் என்று பாகுபாடு இன்றி அனைத்து வகைக் கலைகளையும் இது மேம்படுத்த முயல்வதுடன், அழிந்து வரும் மரபு வழிக் கலைகளுக்கு, குறிப்பாக கோலாட்டம், கும்மி, கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக் கூத்து முதலான பிற ஆட்டங்கள் அனைத்தையும் பாது காக்கவும் வளர்த்தெடுக்கவும் மூத்த கலைஞர் களைக் கொண்டு பயிற்சி அளிக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com